கொரோனா பாதித்தவர்களில் 76% பேர் ஆண்கள்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்களாகவும், 24 சதவீதம் பேர் பெண்களாகவும் இருப்பதாகவும், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்த இந்திய அரசு அனுமதித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 693 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4,067 ஆக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவது:
கொரோனா தொற்றால் இந்தியாவில் இதுவரை 109 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஏப்.,05) மட்டும் 30 பேர் பலியாகியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே இறப்புகளில் 63 சதவீதம் பேர் பதிவாகியுள்ளன, அதே சமயம் 40 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் இறந்துள்ளனர். 7 சதவீதம் பாதிக்கப்பட்டவர்கள் 40 வயதுக்கு குறைவானவர்கள். மொத்தமாக கொரோனா பாதித்தவர்களில் 76 சதவீதம் பேர் ஆண்களாகவும், 24 சதவீதம் பேர் பெண்களாகவும் இருக்கின்றனர்.